சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த கிராமங்களை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கை செல்லா தலைமையில், மாவட்ட தலைவர் கிணார் இரா.சதீஷ், மாவட்ட பொருளாளர் அச்சரப்பாக்கம் இரா.சந்திரன், சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் ஆகியோர் முன்னிலையில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உடனடியாக அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் அனைத்து கிராமங்களிலும் முறையாக 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.
இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தீனன், மாவட்ட அமைப்பு குழு செயலாளர் கண்ணன், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் சிடாமணி, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுதொடர்பான கோரிக்கை மனுவை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், வீரமுத்து ஆகியோரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.