சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகார்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அழுது புலம்பிய பெண்கள்


சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகார்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அழுது புலம்பிய பெண்கள்
x
தினத்தந்தி 14 May 2018 11:30 PM GMT (Updated: 14 May 2018 9:59 PM GMT)

தங்கள் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அழுது புலம்பிய பெண்கள், பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 33), தனது இரண்டரை வயது மகன் விஸ்வா என்று விஸ்வஜித், சகோதரிகள் கன்னியம்மாள் (30), சாரதா (13) ஆகியோருடன் வந்தார்.

அந்த பெண்கள், தங்கள் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், தங்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்பதால், தங்களை கருணை கொலை செய்துவிடுமாறும் கூறி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அழுது புலம்பினார்கள்.

அப்போது இதுபற்றி ஜெயலட்சுமி கூறியதாவது:–

நாங்கள் கடம்பத்து£ர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் சின்னத்தெருவில் வசித்து வருகிறோம். எங்களது தாயார் கடந்த 22–12–2015 அன்று இறந்து போனார். எங்களது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில், சென்னையில் காவலராக பணிபுரியும் எங்கள் உறவினர் ஒருவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து நாங்கள் குடியிருக்கும் வீட்டையும், சொத்தையும் அபகரிக்கும் நோக்கில் எங்களை துன்புறுத்தி வீட்டை அடித்து நொறுக்கினார்.

இதுபற்றி நாங்கள் மணவாளநகர் போலீசில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த குடும்பத்தினர் எங்கள் வீட்டையும் சொத்தையும் அபகரிப்போம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நாங்கள், எங்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக கலெக்டரை சந்தித்து முறையிட வந்து இருக்கிறோம். அவ்வாறு நியாயம் கிடைக்கவில்லை என்றால் எங்களை கருணைக்கொலை செய்து விடுமாறு கேட்டுக் கொள்ள வந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் இது தொடர்பான புகார் மனுவை ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story