தலை முடி கருப்பாக மருந்து தருவதாக கூறி சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வைத்தியர் கைது


தலை முடி கருப்பாக மருந்து தருவதாக கூறி சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வைத்தியர் கைது
x
தினத்தந்தி 15 May 2018 5:15 AM IST (Updated: 15 May 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

தலை முடி கருப்பாக மருந்து தருவதாக கூறி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு செங்குன்றம் சாலை லட்சுமி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 59). இவர் பல ஆண்டுகளாக தனது வீட்டிலேயே வைத்திய சாலை நடத்தி வருகிறார். தன்னிடம் வருபவர்களுக்கு நாடி ஜோதிடம் பார்த்து அவர்களின் வியாதிக்கு லேகியம், தைலம் உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு தலை முடி செந்நிறத்தில் இருப்பதாக கூறி தன்னிடம் சிகிச்சைக்கு வருமாறு அழைத்தார். கடந்த மாதம் 27–ந் தேதி அந்த சிறுவனை, ராதாகிருஷ்ணன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அப்போது அவர், ‘‘உன் தலை முடியை கருப்பாக மாற்றுவதற்கு மருந்து தருகிறேன். ஆனால் உன் உடல் முழுவதையும் பார்த்து விட்டு தான் மருந்து தர முடியும், எனவே ஆடைகளை கழற்று’’ என்று சிறுவனிடம் கூறினார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து உள்ளான்.

இதையடுத்து ராதாகிருஷ்ணன், சிறுவனை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து சென்றுவிட்டான். வைத்தியர் தன்னிடம் நடந்துகொண்ட முறை குறித்து அவன் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் அந்த சிறுவனை மீண்டும் சந்தித்து ‘‘மருந்து தயாராக உள்ளது என்னுடன் வா’’ என்று அழைத்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுவன் இதுபற்றி பெற்றோரிடம் கூறினார். அதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story