எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு


எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 14 May 2018 11:30 PM GMT (Updated: 14 May 2018 9:59 PM GMT)

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்துடன் சுற்றுலா வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவொற்றியூர்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் துரைசாமி (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் திருவொற்றியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். சென்னையின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

நேற்று முன்தினம் இரவு எண்ணூரில் முகத்துவாரம் பகுதிக்கு அண்ணாதுரை உள்பட அவரது குடும்பத்தினர் 13 பேர் சென்றனர். அங்கு கலையரசன் என்பவரது படகில் ஏறி கடலுக்கு சென்றனர்.

அங்கு உள்ள மணல்மேடு பகுதியில் படகில் இருந்து இறங்கி கடலில் குளித்த அவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பி வந்தனர். அப்போது துரைசாமி மட்டும் அவர்களுடன் வராமல் மாயமானது தெரியவந்தது.

இதனால் பதறிப்போன அவர்கள் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் சென்று மாணவரை தேடினார்கள். அப்போது துரைசாமி மணல்மேடு பகுதியில் கரையோரம் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடும்பத்தினருடன் சேர்ந்து கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் துரைசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story