வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்


வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 15 May 2018 4:30 AM IST (Updated: 15 May 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஒன்றியம் நவம்பட்டு, மதுரா, இருதயபுரம் கிராமத்தில் சுமார் 8 மாதமாக குடிநீர் இல்லாமல் அல்லல்படும் மக்களுக்கு குடிநீர் வழங்கக் கோரியும், தனிநபர் கழிவறையை உடனடியாக கட்டி முடிக்கக் கோரியும் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவண்ணாமலை தாலுகா குழு சார்பில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து தாரை, தப்பட்டையை அடித்து கொண்டு கையில் பூ மாலை மற்றும் காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தாலுகா தலைவர் முருகையன் தலைமை தாங்கினார்.

அப்போது திருவண்ணாமலை ஒன்றியம் நவம்பட்டு, மதுரா, இருதயபுரம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். தனிநபர் கழிவறையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். தச்சம்பட்டு, அண்ணா நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். பெரிய கல்லப்பாடி, மதுரா, அண்ணாநகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story