மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை போலீசார் விசாரணை + "||" + Investigative police investigate Muthuatti beaten up near Calimangalam

காரிமங்கலம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை போலீசார் விசாரணை

காரிமங்கலம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் தும்பலஅள்ளி ஊராட்சி நடுக்கொட்டாயை சேர்ந்தவர் சின்னம்மாள்(வயது 70). இவருடைய கணவர் இறந்து விட்டார். கடந்த சில ஆண்டுகளாக சின்னம்மாள் அப்பகுதியில் உள்ள கூத்தாண்டப்பன் கோவில் அருகே குடிசையில் தனியாக வசித்து வந்தார். இவர் ஆதரவற்றவர் என்பதால் அரசின் முதியோர் உதவித்தொகை வாங்கி அதன்மூலம் பிழைப்பு நடத்தினார்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகையை வாங்கிக்கொண்டு மூதாட்டி வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் குடிசையின் பின்புறம் சின்னம்மாள் நெற்றியில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக தும்பலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரும் விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது மூதாட்டி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து மோப்பநாய் பைரவன் அங்கு வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி கூத்தாண்டப்பன் கோவில் வாசலில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, எதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார்?, பணத்திற்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.