பொது கழிவறைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தின் மேல் ஏறி நின்று பொதுமக்கள் போராட்டம்


பொது கழிவறைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தின் மேல் ஏறி நின்று பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2018 4:15 AM IST (Updated: 15 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், பொது கழிவறைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கட்டிடத்தின் மேல் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெரு அருகே உள்ள மந்திரி சந்து பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பலருடைய வீடுகளில் கழிவறைகள் இல்லாததால் பொது கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த கழிவறைகளுக்கு நகராட்சி சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகளையும் செய்யவில்லை. இதனால் துர்நாற்றம் வீசி வந்த நிலையிலும் அப்பகுதி பொதுமக்கள் வேறு வழியில்லாமல் அந்த கழிவறைகளை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மந்திரி சந்து பகுதிக்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது கழிவறைகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், கழிவறை கட்டிடத்தின் மேல் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு நகரசபை முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது கழிவறைகளை இடிக்கக்கூடாது என்றும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், பொது கழிவறைகளை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story