அடிப்படை வசதிகள் கேட்டு புதுவளசல் கிராமமக்கள் கலெக்டரிடம் மனு


அடிப்படை வசதிகள் கேட்டு புதுவளசல் கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

அடிப்படை வசதிகள் கேட்டு புதுவளசல் கிராமமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோவில்பட்டி பகுதியில் நகராட்சியின் பராமரிப்பில் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இருந்து வந்தது. இதில் தற்போது மயான கொட்டகையை காணவில்லை. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் மனு அளித்து இருந்தோம். ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இனியாவது எங்களுக்கு புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

கறம்பக்குடி தாலுகா புதுவளசல் கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் தேவைக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும். பஸ் நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலைக்கடை அமைத்துத்தர வேண்டும். புதுவளசல் ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். மேலும் குறைந்த மின்அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், காயம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இருந்து காலை 10 மணிக்கு மேல் எந்த பஸ்சும் இயக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் புதுக்கோட்டைக்கு வர வேண்டுமானால் காயம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவரங்குளத்திற்கு நடந்தே சென்று, பின்னர் பஸ் ஏறி புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கூறியிருந்தனர். 

Next Story