‘சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்’ திவாகரன் பரபரப்பு பேட்டி


‘சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்’ திவாகரன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 14 May 2018 11:15 PM GMT (Updated: 2018-05-15T03:41:50+05:30)

எனக்கு நோட்டீஸ் வழங்கியது தினகரனின் ‘பிளாக்மெயில்’ அரசியல். ‘சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்’ என திவாகரன் மன்னார்குடியில் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. இந்த பனிப்போர் ஒரு கட்டத்தில் வெடித்தது. இருவரும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

தனது புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை மற்றும் மன்னார்குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்றும் அறிவித்தார். கட்சி தொடங்கிய உடன் சென்னையில் அம்மா அணி சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திவாகரன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் திவாகரன் புதிதாக கட்சி தொடங்கிய தகவல் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. திவாகரன்-தினகரன் இடையேயான மோதல் மற்றும் திவாகரனின் புதிய கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் சசிகலா, திவாகரனுக்கு கடந்த 9-ந்தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த நோட்டீசில் தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று திவாகரனுக்கு தடை விதித்தார். மேலும் ‘எனது அக்கா’, ‘என் உடன் பிறந்த சகோதரி’ எனும் உரிமையை கோரி ஊடகங்களில் பேசி வருவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இதையும் மீறி செயல்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நோட்டீசால் திவாகரன் கடும் அதிர்ச்சி அடைந்தார். தனது சகோதரியிடம் இருந்து இப்படி ஒரு நோட்டீஸ் தனக்கு வரும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நேற்று காலை அவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கூறிய கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா எனக்கு அனுப்பியுள்ள நோட்டீசை இரண்டு வரியில் வழங்கியிருக்கலாம். ஆனால் 15 பக்க நோட்டீசை வழங்கியுள்ளார். அதில் தினகரனின் புகழாரங்களே இடம் பெற்றுள்ளன. நோட்டீஸ் வழங்கியது தினகரனின் ‘பிளாக்மெயில்’ அரசியல்.

நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நிற்காது. அது இன்னும் வேகமாக செல்லும். சசிகலா அனுப்பிய நோட்டீசால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. வக்கீல் நோட்டீஸ் எனக்கு வருவதற்கு முன்பே வெற்றிவேல் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது எப்படி நடந்தது?.

முதலில் ஓ.பி.எஸ்.சுக்கும், சசிகலாவுக்கும் விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவிற்கும் விரோதத்தை ஏற்படுத்தினார். தற்போது எனக்கும், சசிகலாவிற்கும் விரோதத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார்.

1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது அ.தி.மு.க. என்பது போல் சசிகலா நோட்டீசில் அவர்கள் ஜோடித்து இருக்கிறார்கள். கட்சி 1972-ம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை கூட அவர்கள் மறந்துவிட்டார்கள்.

கட்சி 1972-ல் ஆரம்பிக்கும்போது, அந்த விதையை முதலில் விதைத்தவர் அண்ணன் சைதை துரைசாமி. அவர் தான் சத்யா ஸ்டூடியோவில் அ.தி.மு.க. என்ற விதையை விதைத்தவர். அந்த சரித்திரம் நிறைய பேருக்கு தெரியாது. அதற்கு தண்ணீர் விட்டு வளர்த்தவர்கள் மறைந்த எஸ்.டி.எஸ்., ஆர்.எம்.வீரப்பன் போன்ற தலைவர்கள். லட்சோப லட்சம் தொண்டர்கள் உழைப்பால் அ.தி.மு.க. என்ற விதைக்கு நீரூட்டப்பட்டு, வளர்க்கப்பட்டு இன்றைக்கு ஆலம் விருட்சமாக உள்ளது.

எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகாத்தனம். சசிகலா இனி எனக்கு சகோதரி அல்ல. சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன். அவர் இனிமேல் முன்னாள் சகோதரி தான்.

காவிரி பிரச்சினைதான் எங்களது முதல் கருத்து. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்போம். ஊடகங்களில் நான் பேசியது அனைத்துமே சத்தியப்பூர்வமான உண்மை. தேர்தல் நேரத்தில் இன்னும் தீவிரமாக பேசுவோம். விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி. இனியாவது என்னை ‘மாபியா குடும்பம்’ என அழைக்க மாட்டார்கள். 33 ஆண்டுகளாக சசிகலா குடும்பம் என்ற பெயரோடு ‘மன்னார்குடி மாபியா’ என்பது போன்ற விமர்சனங்களையும் நான் தாங்கிக்கொண்டு இருந்தேன். இப்போது அந்த சஞ்சலம் நீங்கி நான் நிம்மதியாக இருக்கிறேன்.

சசிகலாவின் தம்பி என அடையாளப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை.

மூன்று முறை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவன் நான். எங்கள் குடும்பத்தில் அ.தி.மு.க ஆரம்பித்த காலத்தில் இருந்து இருப்பவன் நான் மட்டும்தான். எனது மகன் மற்றும் மருமகனை சசிகலாவை சந்திக்க விடவில்லை. நான், மூன்று முறை சசிகலாவை சிறையில் உள்ள அதிகாரிகளின் தயவால் சந்தித்தேன். தமிழகத்தின் வெற்றிடத்தை நானோ, ரஜினியோ, கமலோ, நிரப்ப முடியாது. மக்கள் தான் நிரப்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story