நீச்சல் குளத்தில் மூழ்கிய நண்பரை காப்பாற்றிய வாலிபர் பலி


நீச்சல் குளத்தில் மூழ்கிய நண்பரை காப்பாற்றிய வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 May 2018 10:12 PM GMT (Updated: 2018-05-15T03:42:58+05:30)

பயந்தரில் நீச்சல் குளத்தில் மூழ்கிய நண்பரை காப்பாற்றிய வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

வசாய்,

தானே மாவட்டம் பயந்தர் உத்தன் பகுதியில் கேளிக்கை பூங்காவிற்கு மும்பையை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சுற்றுலா சென்றிருந்தனர். இரவு அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது ஒரு வாலிபர் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி உள்ளார்.

குடிபோதையில் இருந்த அவர் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தார். உதவி கேட்டு அலறினார். அந்த சத்தத்தை கேட்டு அவரது நண்பர்கள் ஓடி வந்தனர். அவர்களில் ராகுல் கவுசில் நாத் (வயது24) என்பவர் தண்ணீரில் குதித்து அவரை மீட்டார். இந்த நிலையில், துரதிருஷ்டவசமாக அவர் தண்ணீருக்குள் மூழ்கினார்.

பின்னர் மயங்கிய நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த உத்தன் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story