கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 91 பேர் கைது
திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். ஆற்று மணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாத்து தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ரவி, தலைவர் மூர்த்தி, பொருளாளர் விஜய், மண்டல செயலாளர்கள் முத்துபாண்டி, சதாம்உசேன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு தள்ளு–முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை போலீசார் கைது செய்து பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.