மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ.


மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 14 May 2018 11:45 PM GMT (Updated: 14 May 2018 10:25 PM GMT)

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின் தவறான கல்விக்கொள்கையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2–ம் கட்ட கலந்தாய்வு முடிந்தநிலையில் 115 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த இடங்களுக்கு ஒட்டுமொத்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதன்பின்னரே வெளிமாநில மாணவர்களுக்கு இடங்களை வழங்கவேண்டும். இதுதொடர்பாக கவர்னரும், முதல்–அமைச்சரும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்காமலும், கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத நிலையும் இருந்தது. தற்போது தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக குறை இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அரசிடம் பேசவேண்டும்.

ஆனால் அதை விடுத்து மத ரீதியிலான கலவரத்தை தூண்டும்விதமாக செய்யக்கூடாது. அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியது பள்ளிகளின் கடமை. குறை இருந்தால் அரசிடமோ, நீதிமன்றத்திலோ முறையிடலாம். ஆனால் அரசுக்கு சவால்விடும் விதத்திலும், அரசை மிரட்டும் விதத்திலும் செயல்படக்கூடாது.

அரசின் சட்டதிட்டங்களை ஏற்காமல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் தனியார் பள்ளிகளை அரசு கையகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story