கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட கோபிபாளையம் மற்றும் போடிசின்னாம்பாளையம் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் கோபி–சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள கோபிபாளையம் பிரிவுக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தாசில்தார் பூபதி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றுநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீராக குடிநீர் வழங்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோபிபாளையம், போடிசின்னாம்பாளையம் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளதால், வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்’ என்றனர்.
இதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘கோபிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 8.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் கோபிபாளையம் பிரிவில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.