போலீசார் ஒத்துழைப்புடன் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம மக்கள் புகார் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு
அய்யம்பாளையம் பகுதியில் போலீசார் ஒத்துழைப்புடன் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதியில் நொச்சியோடை, சின்ன ஓடை, புலியூத்து ஓடை, பூசாரி ஓடை, சிவக்காட்டு ஓடை, முத்துப்பேச்சி ஓடை, எருக்காட்டு ஓடை, வறட்டாறு ஓடை ஆகியவை உள்ளன. மழைக்காலத்தில் தண்ணீரில் அதிக அளவில் மணல் அடித்து வரப்பட்டு ஓடைகளில் தேங்குகிறது. இந்த மணலை, அனுமதியின்றி ஒரு கும்பல் அள்ளி செல்கின்றனர்.
மருதாநதி அணையின் உட்புறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பகல் நேரத்தில் வண்டல் மண்ணை பெயரளவில் அள்ளி விட்டு இரவு முழுவதும் ஓடைகளில் டிராக்டர் மூலம் மணலை அள்ளி செல்கின்றனர்.
ஓடையில் உள்ள மணலை அள்ளி, அணையின் உட்புறத்தில் குவியலாக குவித்து வைத்துள்ளனர். பின்னர் இரவில் அவர்கள் அங்கிருந்து அள்ளி செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. ஒரு டிராக்டர் மணல் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் முன்வரவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
அனுமதியின்றி மணல் அள்ளுவதால், ஓடைகளின் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அங்குள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் தண்ணீரின் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஓடையை ஒட்டியுள்ள தென்னை, மாமரங்கள் கருகி வருகின்றன.
இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் வருவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். தங்களது கண்ணெதிரே மணல் அள்ளுவதை தடுக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி தென்னை விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் அந்த பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி மணல் அள்ளினால் டிராக்டரை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மணல் அள்ளுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அய்யம்பாளையத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர், அனைத்து விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். அய்யம்பாளையம் பகுதியில் போலீசார் ஒத்துழைப்புடன் மணல் திருட்டு நடப்பதாக கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.
இதேநிலை தொடர்ந்தால், வாழத்தகுதியற்ற இடமாக அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மாறி விடும் என்பதால் ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.