திண்டுக்கல்லில்,சாலை தடுப்பில் மோதிய கார், பறந்து சென்று எதிரே வந்த கார்கள் மீது விழுந்த பயங்கரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் பலி
திண்டுக்கல் அருகே சாலை தடுப்பில் மோதிய கார் பறந்து சென்று, எதிரே வந்த 2 கார்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கோவை அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் பலியானார்.
திண்டுக்கல்,
கோவையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50). இவர், ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்துக்கழக மேலாளராக பணியாற்றி வந்தார். ஜெயச்சந்திரன் கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். அவருடன், டிரைவர் மற்றும் மற்றொருவர் வந்துள்ளனர்.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (51). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரராக உள்ளார். இவருடைய மனைவி சரண்யா. இவர்களுடைய குழந்தைகள் தன்யதா (10), நமீஸ் (9). இந்த தம்பதியின் உறவினரான ராஜ்குமார் மனைவி சந்தியா (39). இவருடைய மகன் தரணீஷ் (9). இவர்கள் 6 பேரும் ஒரு காரில் கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். காரை ரவிச்சந்திரன் ஓட்டினார்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல்லா. இவர், மதுரையில் பட்டுத்துணிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் அனித் (19). இவர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜவுளிக்கடைகளுக்கு சென்று பட்டுத்துணிகள் ஆர்டர் எடுத்து வருவது வழக்கம்.
அதன்படி நேற்று அனித், சம்சுதீன் (39), விக்னேஷ் (22) ஆகியோர் ஒரு காரில் மதுரையில் இருந்து கரூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். காரை சம்சுதீன் ஓட்டினார். அந்த கார், திண்டுக்கல் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை அடுத்த, காமாட்சிபுரம் விலக்கு பகுதியில் வந்துகொண்டு இருந்தது.
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிள் சாலையின் குறுக்காக வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, காரை வலது பக்கமாக சம்சுதீன் திருப்பினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி, மையத்தடுப்பு சுவரில் மோதியது.
மோதிய வேகத்தில் கார், சினிமாவை மிஞ்சும் வகையில் அந்தரத்தில் பறந்தது. பின்னர் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த ரவிச்சந்திரனின் கார் மீது விழுந்து, அதன்பிறகு வந்த ஜெயச்சந்திரன் கார் மீதும் மோதியது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் போக்குவரத்துக்கழக மேலாளர் ஜெயச்சந்திரன் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், காயம் அடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இதில், ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஜெயச்சந்திரனுடன், காரில் வந்த டிரைவர் உள்பட 2 பேரும் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன்யதா, நமீஸ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த விபத்தில் காயமடைந்த சரண்யா, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் திண்டுக்கல்–பழனி சாலையில் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே கோவையில் இருந்து வந்த அரசு பஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதில் கோவையை சேர்ந்தவர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜெயச்சந்திரன் திண்டுக்கல் நோக்கி காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.