ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை


ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை
x
தினத்தந்தி 15 May 2018 5:15 AM IST (Updated: 15 May 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் வீட்டில் தனியாக வசித்த ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை,

சிவகங்கை ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ராஜா வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. மேலும் அவரது மோட்டார் சைக்கிள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் ராஜா வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் காயங்களுடன் ராஜா பிணமாக கிடந்தார்.

இதனைத்தொடர்ந்து ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

அங்கு டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. முன்னதாக ராஜாவின் வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து அப்பகுதியில் உள்ள ஒரு கடை முன்பாக சென்று நின்றுவிட்டது. இதேபோன்று தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story