மக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டு தான் இருக்கும் கமல்ஹாசன் பேட்டி


மக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டு தான் இருக்கும்  கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2018 9:30 PM GMT (Updated: 15 May 2018 1:39 PM GMT)

மக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் பரவிக் கொண்டுதான் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

தூத்துக்குடி, 

மக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் பரவிக் கொண்டுதான் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

வரவேற்பு

நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு மக்கள் நீதி மய்யத்தினர் திரளாக வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்களை சந்திப்பதும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களை சந்திப்பதுமே இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் ஆகும். கட்சியை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் சிறப்பாக நடக்கிறதா? என்பதை அறியும் வாய்ப்பாகவும் இந்த பயணத்தை கருதுகிறேன். அப்போது பொதுமக்கள் குறைகளை தெரிவித்தால், அதனை கேட்பேன். யாராவது மக்களின் குறைகளை கேட்க வேண்டும். அதனால் நான் கேட்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காமல், ஆலை நிறுத்தப்பட்டு இருப்பது முதல் படி. இது நீண்டகால போராட்டம். அதற்கு கிடைத்த முதல் படி வெற்றியாகவே ஆலையை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை நினைக்க வேண்டும். அரசு மக்களின் கோரிக்கையை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் பரவிக் கொண்டுதான் இருக்கும். அதற்கு மக்கள் நீதிமய்யத்தின் ஆதரவு உண்டு. அதனை ஒரு நியாயமான போராட்டமாக கருதுகிறோம்.

பாலகுமாரன் குடும்பத்துக்கு இரங்கல்

மேலும், எனது நெருங்கிய நண்பர் எழுத்தாளர் பாலகுமாரன் மரணம் அடைந்து உள்ளார். சினிமாவில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் எனக்கு விருப்பமான எழுத்தாளர். நாங்கள் 2 பேரும் சேர்ந்து எழுதி உள்ளோம். நல்ல, நீண்டகால நட்பு. அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அவர் கார்மூலம் நாகர்கோவில் புறப்பட்டு சென்றார்.


Next Story