தினத்தந்தி செய்தி எதிரொலி ஆழ்வார்திருநகரி கோவில் சப்பரங்களுக்கு முழுமையாக பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அவதார திருவிழாவில் நவ திருப்பதி பெருமாள்களின் சப்பரங்களை நிறுத்தும் இடத்தில், வழக்கம் போல் முழுமையாக பந்தல் அமைக்க கோவில் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அவதார திருவிழாவில் நவ திருப்பதி பெருமாள்களின் சப்பரங்களை நிறுத்தும் இடத்தில், வழக்கம் போல் முழுமையாக பந்தல் அமைக்க கோவில் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். இந்த பணி நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
அவதார திருவிழாதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமும், குரு தலமுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா வருகிற 19–ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5–ம் திருநாளான 23–ந்தேதி (புதன்கிழமை) காலையில் நம்மாழ்வார்– நவ திருப்பதி பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இரவில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவையாக கருட வாகனங்களில் நவ திருப்பதி பெருமாள்கள் எழுந்தருளி, கருடசேவை நடைபெறும்.
நவ திருப்பதி பெருமாள்களை ஒரே இடத்தில் தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி நவ திருப்பதி பெருமாள்களின் சப்பரங்களை நிறுத்துவதற்காக, கோவில் முன்மண்டபத்தில் இருந்து கோவில் நுழைவுவாயில் வரையிலும் பந்தல் அமைக்கப்படுவது வழக்கம்.
தினத்தந்தி செய்தி எதிரொலிஇந்த ஆண்டு கோவில் முன்மண்டபத்தில் இருந்து சுமார் 100 அடி தூரம் மட்டுமே பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நவ திருப்பதி பெருமாள்களின் சப்பரங்களை வெயிலில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். பக்தர்களும் வெயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் கோவில் நிர்வாக அலுவலரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக தினத்தந்தியில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
வழக்கம் போல் கோவில் முன்மண்டபத்தில் இருந்து கோவில் நுழைவுவாயில் வரையிலும் பந்தல் அமைக்க கோவில் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டார். இதன்படி, நேற்று கோவில் நுழைவாயில் வரை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி, நடந்து வருகிறது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.