விக்கிரமசிங்கபுரம் அருகே காரில் ஆடுகளை கடத்திய 5 பேர் கைது


விக்கிரமசிங்கபுரம் அருகே காரில் ஆடுகளை கடத்திய 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2018 2:00 AM IST (Updated: 15 May 2018 9:00 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே காரில் ஆடுகளை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம், 

விக்கிரமசிங்கபுரம் அருகே காரில் ஆடுகளை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரில் ஆடுகள் கடத்தல்

விக்கிரமசிங்கபுரம் அருகே அடையகருங்குளம் மெயின் ரோடு விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் தர்மர் (வயது 44) கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன் ஆடுகளை கயிற்றில் கட்டிப்போட்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு காரில் வந்தனர். அவர்கள், கயிற்றில் கட்டி இருந்த 6 ஆடுகளை அவிழ்த்து காரில் ஏற்றினர்.

அப்போது ஆடுகள் சத்தம் எழுப்பியதால், உடனே தர்மர் வெளியே வந்து பார்த்தார். உடனே மர்மநபர்கள் காரில் ஏறி, ஆம்பூர் ரோட்டில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தர்மர் ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

5 பேர் கைது

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ஏட்டு சண்முகவேல் ஆகியோரிடம், இதுகுறித்து தர்மர் தெரிவித்தார். உடனே போலீசார் வயர்லெஸ் மூலம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாரும் ஆம்பூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றனர். சாத்தான்பட்டி பகுதியில் போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர்.

காரில் இருந்த செங்கோட்டை முத்துகுளவிளம்பி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஷேக் செய்யது அலி (வயது 40), ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (26) மற்றும் 16, 17 வயதுடைய 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் காரில் இருந்த 6 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஷேக் செய்யது அலி, செங்கோட்டையில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் தொழிலாளியாக பாலகிருஷ்ணன் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story