கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா


கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா
x
தினத்தந்தி 15 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-15T21:08:54+05:30)

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி– ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குமரி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவ மாணவ–மாணவிகளுக்கான தேர்வு நேற்று நடந்தது. அப்போது 3 மாணவர்களையும், ஒரு மாணவியையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான மாணவ–மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கல்லூரியின் நுழைவு பகுதியில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் மாணவ–மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தர்ணா நடத்தியதால் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை. போலீசார் பாதுகாப்பு மட்டுமே வழங்கினர்.

தர்ணா போராட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, ‘மருத்துவ கல்லூரி தேர்வில் 2 பாடத்தில் தோல்வி அடைந்த  மாணவர்கள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது இல்லை. தற்போது தேர்வு எழுத மறுக்கப்பட்ட 4 பேருமே 2 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள். ஆனால் இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். கோர்ட்டு மாணவியும், 3 மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கலாம் என்று கூறியிருந்தது.

அதைத் தொடர்ந்து 4 பேரும் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயாராகினர். ஆனால் தற்போது 4 பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு எழுத அனுமதி இல்லை எனில், 4 பேரிடமும் எதற்காக கட்டணம் வசூல் செய்ய வேண்டும்? கட்டணம் வசூல் செய்தபோதே அவர்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் தேர்வு எழுத வந்தவர்களை தடுத்தது கண்டிக்கத்தக்கது. எனவே 4 பேரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அதுவரை நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துவோம்‘ என்றனர்.

தர்ணாவில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் கருப்பு கொடியை பிடித்திருந்தனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

Next Story