கர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது கி.வீரமணி பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 16 May 2018 4:30 AM IST (Updated: 16 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தர்மபுரியில் கூறினார்.

தர்மபுரி,

திராவிடர் கழகத்தின் சார்பில் மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு பகுத்தறிவு சார்ந்த புத்தகங்கள் ஆய்வுரை மற்றும் வெளியீட்டு விழா தர்மபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெரியாரால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு கொள்கைகளால் ஏற்பட்ட கருத்து புரட்சி மற்றும் அறிவுபுரட்சியை மக்களிடையே கொண்டு செல்வதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. வர்ணாசிரம தர்மத்தால் உருவான சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே திராவிடத்தின் முக்கிய நோக்கமாகும்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பணநாயகத்தால் அதிக இடங்களை பெற்று உள்ளது. இந்த தேர்தலில் சாதி மற்றும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஜனநாயகத்தை பணநாயகமும், சாதி ஆதிக்கமும் ஆட்கொள்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

இதற்கு தேர்தல் நடைமுறைகளில் உரிய சீர்திருத்தங்களையும், புதிய சட்டங்களையும் கொண்டு வருவது மிகவும் அவசியம். வாக்காளர்கள் பணம் பெறுவதை தடுக்க அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற சட்டத்தையும், தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் திட்டங்களில் சலுகைகள் கிடையாது என்ற விதிமுறையையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவும், தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டவும் தமிழகஅரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வரைவுதிட்டத்தில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியாத நிலையில் தமிழகத்திற்கு சாதகமான நிலை உள்ளது என்று அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை தமிழகஅரசு எடுப்பது அவசரமும், அவசியமுமாகும். இதுதொடர்பாக தமிழகஅரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

இந்த விழாவில் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, டாக்டர்கள் செந்தில், செந்தில்குமார், பிரபு ராஜசேகர், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், ராஜேந்திரன், வினோத்வெற்றிவேல் உள்பட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story