குளித்தலை மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்


குளித்தலை மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 15 May 2018 10:30 PM GMT (Updated: 15 May 2018 9:30 PM GMT)

குளித்தலை மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குளித்தலை,

குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கம்பம் கோவிலில் நடப்பட்டு பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் ஏராளமானோர் அதிகாலையில் காவிரி ஆற்றில் நீராடி புனிதநீர் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து குளித்தலை நகரம், இதை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் கடம்பந்துறை, பெரியபாலம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் மகா மாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் இருந்து இழுக்கப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளான கடைவீதி, பஜனைமடம், ஆண்டார் மெயின்ரோடு, எம்.பி.எஸ். அக்ரஹாரம், டவுன்ஹால் தெரு வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மகா மாரியம்மன் கோவில் தேர் அதன் நிலையை அடைந்ததும். இக்கோவில் முன்பு தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு தீமிதிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இக்கோவில் தேரோட்டத்தையொட்டி திரளானோர் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்தும் பல்வேறு முறையில் அலகு குத்திக்கொண்டு மாரியம்மன் கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இத்தேரோட்டத்தையொட்டி குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் முதல் மாரியம்மன் கோவில் வரை உள்ள பகுதிகளிலும், தேர் சென்ற வீதிகளிலும், நகரின் முக்கிய இடங்களிலும் பொதுமக்கள், நண்பர்கள் குழுக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story