குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி-சென்னை முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீடு குறைப்பு பயணிகள் அவதி


குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி-சென்னை முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீடு குறைப்பு பயணிகள் அவதி
x
தினத்தந்தி 16 May 2018 4:15 AM IST (Updated: 16 May 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி-சென்னை முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருச்சி,

குருவாயூர்-சென்னைக்கு தினமும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுடன் தூத்துக்குடி-சென்னை இணைப்பு ரெயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் மதியம் 2 மணி அளவில் திருச்சி வந்து புறப்படும். இந்த ரெயிலில் சென்னைக்கு முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீடு திருச்சி வரைக்கும் பொதுவாக இருந்து வந்தது.

மேலும் திருச்சியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீடு அதிகமாகவும் இருந்தது. இதனால் திருச்சியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு டிக்கெட் எடுத்து செல்லும் பயணிகளுக்கு உறுதியான இருக்கைகள் கிடைத்து வந்தன. இந்தநிலையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீட்டில் எண்ணிக்கையை திடீரென ரெயில்வே நிர்வாகம் குறைத்துள்ளது. இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியில் இருந்து சென்னைக்கு அதிக பயணிகள் முன்பதிவு செய்து செல்வது உண்டு. காலை நேரத்தில் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு அடுத்தபடியாக மதியம் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தான் சென்னை செல்வதற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த ரெயிலில் முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீடு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் முதல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குறைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வாஞ்சி மணியாச்சியில் இணைக்கப்படும் இணைப்பு ரெயிலில் 7 முன்பதிவு பெட்டிகளில் இருக்கை ஒதுக்கீடு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கனவே திருச்சி-சென்னைக்கு இருந்து வந்த முன்பதிவு டிக்கெட் ஒதுக்கீட்டில் இருந்ததில் தற்போது 100-க்கும் மேற்பட்ட இருக்கை எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரெயிலில் சென்னைக்கு டிக்கெட் எடுக்கும் போது பலருக்கு உறுதியான இருக்கை டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் கிடைத்து வருகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். ஒதுக்கீட்டில் குறைக்கப்பட்ட டிக்கெட்டுகள் தட்கல் முறைக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரை கோட்டத்திற் குட்பட்ட மணப்பாறை வரை முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையை பொதுவான ஒதுக்கீட்டில் வைத்துள்ளனர். இதனால் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு முன்பதிவு டிக்கெட் பயணிகள் இல்லாமல் காலி இருக்கைகள் இருந்தால் மட்டுமே திருச்சியில் முன்பதிவு செய்யும் போது கூடுதல் பயணிகளுக்கு இருக்கை கிடைத்து வருகிறது.

இதனை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி திருச்சிக்கு முன்பதிவு டிக்கெட் இருக்கை ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இதற்கு ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story