காணாமல் போன 5 ஐம்பொன் சாமி சிலைகளை மீட்க கோரி புகார் மனு போலீசார் வழக்குப்பதிவு


காணாமல் போன 5 ஐம்பொன் சாமி சிலைகளை மீட்க கோரி புகார் மனு போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 May 2018 3:45 AM IST (Updated: 16 May 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் சிவன் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 5 ஐம்பொன் சாமி சிலைகளை மீட்க வேண்டும் என அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கும்பகோணம்,

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் யானை ராஜேந்திரன், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அளித்துள்ள ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

900 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தந்தை ராஜராஜ சோழனின் அஸ்தியை ராஜேந்திர சோழன் கரைப்பதற்காக கொண்டு சென்றபோது அஸ்தி மல்லிகைப்பூவாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஊரில் ராஜேந்திர சோழன், நாரீஸ்வரர் என்ற சிவன் கோவிலை கட்டினார். பின்னர் தான் இந்த ஊருக்கு வீரசோழபுரம் என்ற பெயர் வந்தது. இந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ளது.

இந்த சிவன் கோவிலில் சுமார் 4 அடி உயரமுள்ள உற்சவ திருபுரந்தார், திரிபுரசுந்தரி, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய 5 ஐம்பொன் சிலைகள் சோழர் காலத்தில் நிறுவப்பட்டது.

இந்த சிலைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்து மாயமானது. இந்த சிலைகளை அப்போது கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள் பல கோடி ரூபாய்க்கு விற்று விட்டனர்.

கோவிலின் அப்போதைய அர்ச்சகர், சிலைகள் மாயமானது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கூறியும், அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசில் புகார் ஏதும் அளிக்காமல் தவிர்த்து விட்டனர்.

எனவே இந்த கோவிலில் காணாமல் போன ஐம்பொன் சிலைகளை கண்டுபிடித்து மீட்டு மீண்டும் அந்த சிலைகளை கோவிலின் வழிபாட்டுக்கு வழங்க வேண்டும். இந்த சிலைகளை திருடியவர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த புகாரில், வக்கீல் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரினை பெற்றுக் கொண்ட தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான ஆவணங்களை சிலைகள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார். 

Next Story