இளம்பிள்ளை அருகே கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியது


இளம்பிள்ளை அருகே கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியது
x
தினத்தந்தி 15 May 2018 11:00 PM GMT (Updated: 15 May 2018 10:24 PM GMT)

கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியதால் சாமி சிலைகள் சேதமடைந்தன.

இளம்பிள்ளை,

இளம்பிள்ளை அருகே கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் சாமி சிலைகள் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கிராமம் காடையாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

மேலும் பலத்த காற்று காரணமாக இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. ஒரு சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதனிடையே இரவு 9 மணி அளவில் இடி, மின்னலுடன் மழையின் வேகம் அதிகரித்தது. அப்போது அங்குள்ள செங்குந்தர் மாரியம்மன் முத்துகுமாரசாமி கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதனால் கோபுர கலசம், கோபுரத்தில் இருந்த சாமி சிலைகள் உடைந்துசேதமடைந்தன. மேலும் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அறிந்த பக்தர்கள் பலர் நேற்று கோவிலுக்கு சென்று கோபுரத்தை பார்த்து சென்றனர். மின்னல் தாக்கி கோபுரம் சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story