மலைகளில் இருந்து இயற்கையாக வருகின்ற ஓடைகள்-ஊற்றுத்தண்ணீரை காண்டூர் கால்வாயில் திருப்பி விடக்கூடாது - விவசாயிகள் கூட்டத்தில் வற்புறுத்தல்


மலைகளில் இருந்து இயற்கையாக வருகின்ற ஓடைகள்-ஊற்றுத்தண்ணீரை காண்டூர் கால்வாயில் திருப்பி விடக்கூடாது - விவசாயிகள் கூட்டத்தில் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2018 10:51 PM GMT (Updated: 15 May 2018 10:51 PM GMT)

மலைகளில் இருந்து இயற்கையாக வருகின்ற ஓடைகள்-ஊற்றுத்தண்ணீரை காண்டூர் கால்வாயில் திருப்பி விடக்கூடாது என்று விவசாயிகள் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது கூறியதாவது:- விவசாயிகளின் உப தொழில்களான கொப்பரை உலர்களம், தென்னைநார் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் போதிய மழை பெய்யாததால் தென்னை மரங்கள்காய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உத்திரவின்படி கடன் தொகையை செலுத்தும் படி வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. கடன் தொகையைச் செலுத்தாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியை கருத்தில் கொண்டு கடன் வசூலிப்பை தள்ளி வைக்க வேண்டும். விவசாயிகள் முறையீட்டு குழுகூட்டத்திற்கு உயர் நிலை அதிகாரிகள் வரவேண்டும். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் தர வேண்டும். ராமபட்டினம்-பட்டிய கவுண்டனூர்ரோடு பராமரிப்பு வேலை 2 மாதத்திற்கு முன்பு தொடங்கி இன்னும் முடியவில்லை. விவசாயிகள்தங்கள் தோட்டங் களுக்கு செல்ல முடியவில்லை. பஸ்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மண்ணூர் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.1 கோடியே 84லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டும் தடுப்பணை கட்டும் பணி கால தாமதம் ஆகி வருகின்றது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் வீணாக கேரளா செல்கின்றது. வறட்சி காரணமாக கால்நடைகள் போதிய தீவனம் இல்லாமல் தவித்து வருகின்றன. அதனால் சென்ற ஆண்டு வழங்கியது போல் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வைக்கோல்புல் மானியத்தில் வழங்க வேண்டும். பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பாசனத்திட்டத்தின் தந்தையாக விளங்கும் வி.கே. பழனிச்சாமி கவுண்டரின் உருவச்சிலையை ஆழியாறு அணைப்பகுதியில் வைக்க விவசாயிகளுக்கு அனுமதியும், இடமும் ஒதுக்கித்தர வேண்டும். சர்க்கார்பதியில் இருந்து நல்லாறு வரை மலைகளில் இருந்து இயற்கையாக வருகின்ற ஊற்றுக்கள், ஓடைகளை காண்டூர் கால்வாயில் திருப்பி விடுவதால் இப்பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வற்றிவிட்டது.

ஆகவே திருப்பி விடாமல், இயற்கையாக மலைகளில் இருந்து வரும் ஊற்று, ஓடைத்தண்ணீரை அதன்போக்கிலேயே விட்டு விட வேண்டும். இதனால் விவசாய கிணறுகளில் நிலத்தடிநீர் அதிகரிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் நீராதாரமாக விளங்கும் சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு, தேக்கு மரக்காடுகளாகவும், தனியார் ஆக்கிரமிப்பில் எஸ்டேட்டுகளாகவும் உள்ளன. அப்பகுதிகளை அரசு மீட்டு மீண்டும் சோலைக் காடுகளை உருவாக்க வேண்டும். ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள மெயின் கால்வாய்கள், கிளை வாய்க்கால்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். ஆனைமலை ஆழியாற்றில் சாக்கடை, மனிதக்கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசடைந்துவருகின்றது. இந்த கழிவு குடிநீர் நீரேற்றும் கிணறுகளில் விழுகின்றன. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிக்கின்றனர். உப்பாற்றில் இருந்து மனிதகழிவுகள் ஆழியாற்றில் கலந்து வருகின்றன. தற்போது ஆற்றை சுத்தப்படுத்தி ஆகாயத் தாமரை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கு அரசு நிதி ஒதுக்காததால் பொதுமக்களின் நிதியை எதிர்பார்க்க வேண்டி உள்ளது. இதற்கு எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காளியாபுரம் குளம்பத்துகுளத்தில் வரும் தண்ணீரை தடுத்து வருவதால் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை. இதனால் 620 ஏக்கர் பாசனம் தடுக்கப்படுகிறது. எனவே இயற்கையாக வருகின்ற நீரோடையை தடுக்ககூடாது. ஈச்சனாரிபள்ளம், ஒத்தக்கால் மண்டபபள்ளம், தாமரைக்குளம் பள்ளம் ஆகியவற்றிலிருந்து நாச்சியாளையம் வழியாக வறட்டாற்றுக்கு தண்ணீர்வரும் வகையில் தடுப்பணை, பாலார்பதி, வீரப்பகவுண்டனூர், சொக்கனூர், முத்துக் கவுண்டனூர், சூலக்கல் வழியாக சேர்வகாரன்பாளையத்தில் தடுப்பணையும் கட்ட வேண்டும். திப்பம்பட்டி இளநீர் வணிக வளாகத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் இரவுக் காவலர் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனைமலைப் பகுதியில் முதல் போக நெல் விதை நாற்று தயாரிக்கவேளாண்மைத் துறை கோ-51 ரக நெல் மானியத்தில் வழங்கிவருகிறது. கடந்த 5 ஆண்டு களாக இந்த ரக நெல் வழங்கி வருவதால் மகசூல் குறைந்து வருகிறது. அதனால் மாற்று ரக நெல் விதையை வழங்கவேண்டும். இது தவிர5 வாய்க்கால் மதகு பழுதடைந்து உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story