ராமநாதபுரம் அருகே சேதுபதி கோட்டைக்குள் பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு


ராமநாதபுரம் அருகே சேதுபதி கோட்டைக்குள் பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 5:30 AM IST (Updated: 16 May 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே சேதுபதி கோட்டைக்குள் பாண்டியகால செங்கல் கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிய செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. நான்காவது மரபுநடை ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஆறுமுகக்கோட்டையில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமைப்பின் தலைவர் ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து ஆகியோர் அந்த கோட்டையை ஆய்வு செய்தனர். அப்போது கோட்டைக்குள் உள்ள குளத்தின் கரையில் பிற்காலப்பாண்டியர் கால செங்கல் கோட்டையின் சுவர்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:- ராமநாதபுரம் சேதுபதி மன்னர் முத்து விஜயரெகுநாத சேதுபதி (கி.பி.1711 - கி.பி.1725), பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் ஒரு கோட்டையை கட்டியுள்ளார். இது அறுங்கோண வடிவில் உள்ளதால் ஆறுமுகக்கோட்டை என்கிறார்கள். செங்கல், சுண்ணாம்பு சாந்து கொண்டு இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் வெளியே மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வண்ணம் பூசப்பட்ட, வழுவழுப்பான, சிறிய மற்றும் பெரிய அளவிலான கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு நிற பானைஓடுகள், இரும்புத்தாதுக்கள், சங்குகள், பானைத்தாங்கிகள், தேய்ப்புக்கற்கள் ஆகியவை ஏராளமாக சிதறிக் கிடக்கின்றன. கோட்டையின் கிழக்கு பகுதியில் முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் உள்ளன. எனவே இக்கோட்டையின் உள்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பெருங்கற்காலம், சங்ககாலம் முதல் மக்கள் குடியிருப்பாகவும், இடுகாடாகவும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

இந்த கோட்டைக்குள் முனீசுவரர், கருப்பசாமி கோவில், குளம் ஆகியவை உள்ளன. இக்குளத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் புதைந்த நிலையில் செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் செங்கற்களை இணைக்க களிமண் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செங்கற்கள் 23 செ.மீ. நீளமும், 13.5 செ.மீ. அகலமும், 5 செ.மீ. உயரத்திலும் உள்ளன.

இவை இடைக்காலத்தை சேர்ந்த செங்கல் அளவில் உள்ளன. இந்த கட்டுமானம் பிற்கால பாண்டியர்களால் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் அடிப்பகுதியாக இருக்கலாம். மேலும் இக்கோட்டையின் பெயரில் இங்கு ஓடும் ஆறு, கோட்டைக்கரை ஆறு என அழைக்கப்படுவதாலும், சங்ககால பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாலும் சங்ககாலம் முதல் இந்த கோட்டை இருந்திருக்கலாம்.

தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்று தகவல்கள் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story