கனிராவுத்தர் குளத்தின் கரையில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து லாரி சிறைபிடிப்பு


கனிராவுத்தர் குளத்தின் கரையில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 12:02 AM GMT (Updated: 16 May 2018 12:02 AM GMT)

கனிராவுத்தர் குளத்தின் கரையில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.


ஈரோடு,

ஈரோடு கனிராவுத்தர் குளம் பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டது. குளத்தின் கரைகள் மண்ணால் நிரப்பி பலப்படுத்தப்பட்டு உள்ளன. குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபடுபவர்கள் நேற்று கரையில் உள்ள மண்ணை லாரியில் அள்ளிச்சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கரையில் உள்ள மண்ணை அள்ள எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு துணை தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

கனிராவுத்தர் குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. இந்த கரையில் உள்ள மண்ணை எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் அள்ளப்படுகிறது. மழை பெய்து குளம் நிரம்பினால் கரைகள் எளிதாக உடைந்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துவிடும். எனவே கரையில் உள்ள மண்ணை அள்ள அனுமதிக்கக்கூடாது. மேலும், கரையில் இருந்து மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் கூறும்போது, “மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும், மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று உறுதி அளித்தனர். இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story