கடலூரில் பயங்கரம்: ஆயுதங்களுடன் மீனவர்கள் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை


கடலூரில் பயங்கரம்: ஆயுதங்களுடன் மீனவர்கள் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 16 May 2018 12:21 AM GMT (Updated: 16 May 2018 12:21 AM GMT)

கடலூரில் ஆயுதங்களுடன் இரு கிராம மீனவர்கள் மோதிக்கொண்டனர். இதில் அ.தி.மு.க. பிரமுகர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியதால் பாகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலையில் தேவனாம்பட்டினம் அருகே கடலில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்த தேவனாம்பட்டினம் கிராம மீனவர்கள், சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிக்க கூடாது என்று கூறினர்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சோனாங்குப்பம் மீனவர்கள் தேவனாம்பட்டினம் மீனவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் நடந்த சம்பவத்தை கிராமத்தில் இருந்த மீனவர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து தேவனாம்பட்டினம் கிராம மீனவர்கள் 300 பேர் கையில் கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கரையோரமாகவும், 40-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடல் வழியாகவும் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கினர். அப்போது புயல் பாதுகாப்பு மையம் அருகே நின்று கொண்டிருந்த சோனாங்குப்பம், வடக்கு தெருவை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65) என்பவரை கத்தியால் குத்தினர். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மேலும் கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டியன்(58), தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் மனைவி ஏலாயி(45), பன்னீர்செல்வம் மனைவி முனியம்மாள்(45) ஆகியோரையும் தாக்கினர். இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற மீனவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் சோனாங்குப்பம் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கே கரையோரம் ஆயுதங்களுடன் திரண்டு நின்ற தேவனாம்பட்டினம் கிராம மீனவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து தங்கள் கிராமத்துக்கு புறப்பட்டனர். மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் இரு கிராமங்களுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம், கந்தன், ஓசைமணி உள்பட 19 பேர் மீது கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story