மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் திருட்டு


மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் திருட்டு
x
தினத்தந்தி 17 May 2018 3:45 AM IST (Updated: 17 May 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் திருட்டு நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய நீர் ஆதாரமாக அமராவதி ஆறு விளங்குகிறது. இந்த ஆற்றங்கரையோர கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்தை தக்கவைத்துக்கொள்வதில் அமராவதி ஆற்றின் பங்களிப்பு பெருமளவு உள்ளது.

அந்தந்த பகுதிகளில் பெய்யும் மழைநீரானாலும், ஆற்றில் திறந்துவிடப்படும் நீரானாலும் அவற்றை ஆற்றில் உள்ள மணல் தனக்குள் சேமித்து வைத்துக்கொள்கிறது. ஆற்றுமணல் பகுதியில் தோண்டினால் கிடைக்கும் நீரும், ஈரப்பதமும் இதற்கு சாட்சிகளாகும்.

இந்த நிலையில் அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான மணல் திட்டுகள் காணப்படுகிறது. இவ்வாறு குவியல், குவியல்களாக குவிந்திருக்கும் மணல் சமூக விரோதிகளின் பார்வை பட்டு பாழாகி கொண்டிருக்கிறது.

மடத்துக்குளத்தை அடுத்த கடத்தூர், குமரலிங்கம் போன்ற பல பகுதிகளில் மணல் திருட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளின் செயல்பாடு போதிய அளவில் இல்லாததால் மண்வளம் சுண்டப்பட்டு மடத்துகுளம் சுற்றுவட்டார பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

பொதுவாக ஆற்று மணலுக்கு தண்ணீரை தனக்குள் இழுத்து வைத்துக்கொள்ளும் தண்மை உண்டு. இதனால் சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீர்மட்டம் சீராக இருந்து வரும். தற்போது மணலுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை ஆகியவற்றின் காரணமாக மணல் திருட்டு அதிகரித்து வருகிறது.

இரவு நேரங்களில் ஆற்றுக்குள் இறங்கி, அங்கிருந்து மணலை சாக்கு மூடைகளில் கட்டி, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள் போன்றவற்றில் ஏற்றி கடத்தி சென்றுவருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த திருட்டு, தற்போது பட்டப்பகலில் துணிகரமாக நடந்து வருகிறது.

போலீசாரோ, அரசு அதிகாரிகளோ மணல் கடத்தலை கண்டுபிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தால், அபராதம் கட்டிவிட்டு மணலுடன் வாகனங்களை எடுத்து சென்றுவிடுகிறார்கள். மணல் திருடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது.

எனவே மணல் திருட்டை தடுக்க மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story