கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க உதவும் நவீன படகு வாங்குவதற்கு ரூ.5 லட்சம் நிதி கமல்ஹாசன் அறிவிப்பு


கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க உதவும் நவீன படகு வாங்குவதற்கு ரூ.5 லட்சம் நிதி கமல்ஹாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 11:15 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

“கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க உதவும் நவீன படகை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் நிதி அளிப்பதாக குளச்சலில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.

நாகர்கோவில்,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குளச்சல் சென்ற அவர், குளச்சல் துறைமுகதெரு காணிக்கை மாதா மண்டபத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதில் பங்கேற்ற மீனவர்கள் ‘ஒகி புயல் தாக்கிய போது குமரி மாவட்டத்துக்கு நீங்கள் ஏன் வரவில்லை?“ என கேட்டனர். அதற்கு விளக்கம் அளித்து கமல்ஹாசன் பேசுகையில், “‘ஒகி‘ புயல் தாக்கிய போது வெளிநாட்டில் இருந்ததால் வரமுடியவில்லை. புயலின் போது ஏராளமான மீனவர்கள் மாயமானது வருத்தம் அளிக்கிறது. 500 பேர் வரை இன்னும் காணவில்லை என்று கூறுகிறாா்கள். இழப்பு இழப்புதான். நான் மீனவர்களின் இழப்புகளை புரிந்து கொள்ள வந்துள்ளேன்“ என்று கூறினார்.

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் உண்டியல்களில் பணம் சேமிப்பதை கமல்ஹாசனிடம் காண்பித்தனர். அவர்களிடம் “எதற்காக இந்த பணத்தை சேமிக்கிறீர்கள்?“ என கேட்ட போது, அந்த சிறுவர்கள் கமல்ஹாசனிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் இயற்கை சீற்றம் ஏற்படும் போது மீனவர்கள் பலர் கடலில் மாயமாகி விடுகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்க நவீன படகு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மீனவர் ஒருங்கிணைப்பு சங்கத்தின் சார்பில் அதிநவீன படகு வாங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக உண்டியலில் பணம் சேமித்து வருகிறோம்“ என்று கூறினர். அத்துடன், தாங்கள் கொண்டு வந்த உண்டியல்களை கமல்ஹாசனிடம் காண்பித்தனர். உடனே அவர், அந்த உண்டியல்களில் பணம் போட்டார்.

பின்னர் கமல்ஹாசன் கூறும்போது, மீனவர்களை மீட்க உதவும் அதிநவீன படகு வாங்க தான் ரூ.5 லட்சம் தருவதாக தெரிவித்தார். அத்துடன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மேலும் நிதி தருவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியின் போது மீனவர் ஒருங்கிணைப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகத்தை தடை செய்ய வேண்டும். குமரி மாவட்ட மீனவர்களுக்கு தனி தொகுதி, மீனவர்களுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். கடல் அரிப்பை தடுப்பதற்காக தேவையான இடங்களில் உறுதியான துண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் கூறப்பட்டு இருந்தன.

இதில் குமரி மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட், போஸ், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசன் அங்கிருந்து கருங்கல், சின்னத்துறை, களியக்காவிளை பகுதிகளில் சென்று மக்கள் மத்தியில் பேசினார். தொடர்ந்து மேல்புறம், அழகியமண்டம், தக்கலை போன்ற ஊர்கள் வழியாக நாகர்கோவில் வந்தார்.


Next Story