குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை அறிந்த மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிவைத்து மகிழ்ந்தனர்


குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை அறிந்த மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிவைத்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 7:45 PM GMT)

கோவையில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை அறிந்த மாணவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அந்த தேர்வு முடிவுகளை அனுப்பிவைத்து மகிழ்ந்தனர்.

கோவை,

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து அறிந்துகொள்ளவும், வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளவும் அந்தந்த மாணவ–மாணவிகள் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பிவைக்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் நேற்று காலை 9.30 மணியில் இருந்து பிளஸ்–2 மதிப்பெண்கள் மாணவ–மாணவிகளின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. வீட்டிலிருந்தபடியே மாணவ–மாணவிகள் செல்போனில் தேர்வு முடிவுகளை பார்த்து மகிழ்ந்தனர்.

இதில் தேர்ச்சி பெற்ற சில மாணவ–மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை சக மாணவ–மாணவிகள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர்களிடமும் காட்டினர். ஒருசிலர் தாங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தேர்வுமுடிவுகளை அந்த செல்போனை முகத்தின் அருகே வைத்துக்கொண்டு மற்றொரு செல்போனில் ‘செல்பி’ எடுத்து வாட்ஸ்–அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

காலை 10 மணிக்குள் கோவையில் 70 சதவீத மாணவ–மாணவிகளுக்கு தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஒரே நேரத்தில் அனைத்து மாணவ–மாணவிகளும் முயன்றதால் காலை 10 மணியில் இருந்து 10.30 மணி வரை ½ மணி நேரம் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாணவ– மாணவிகள் கூறியதாவது:–

செல்போனில் தேர்வு முடிவுகள் வெளியிட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.பெரும் பரபரப்பின்றி வீட்டில் இருந்தபடியே குடும்பத்தினருடன் தேர்வு முடிவுகளை பார்த்து பகிர்ந்து கொள்ள முடிந்தது.

கல்வி சேவைகள் அனைத்தும் இனி வங்கி சேவைகள் போல செல்போனில் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை.முன்பெல்லாம் எத்தனை மார்க் எடுத்து இருக்கிறாய்? என்று கேட்டு உறவினர்கள்,நண்பர்கள் போன் செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் சொல்லி சொல்லி அலுத்துப்போய்விடும்.தற்போது இந்த மின் அஞ்சலை அப்படியே நொடிபொழுதில் அவர்களுக்கு அனுப்பி அவர்களது பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற முடியும்.இது போல மதிப்பெண் மறுகூட்டல், தனி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதை கூட செல்போன் சேவையாக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story