எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டீசல், பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை ரத்து செய்ய வேண்டும்


எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டீசல், பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2018 3:45 AM IST (Updated: 17 May 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டீசல், பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை ரத்து செய்ய வேண்டும் என கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை,

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நசிந்து வரும் லாரி தொழிலை மீட்டெடுக்கும் வகையில் புதுச்சேரியில் கடந்த 8–ந்தேதி லாரி உரிமையாளர்களின் சங்கத்தின் 38–வது மகாசபை கூட்டமும், 9–ம் தேதியன்று தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்கத்தின் 22–வது நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.

இதில் அந்த மாநில முதல்–அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

டீசல், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்து மத்திய அரசே விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வை ரத்து செய்வதோடு, விபத்து இழப்பீடு தொகையில் ஒருபகுதியை வாகன உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.

20 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை 35 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும் சில சுங்க சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகள் குறித்து இன்று(வியாழக்கிழமை) நடைபெறும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் நல்ல தீர்வு ஏற்படாவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுபோன்று லாரி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றால் வியாபாரிகள், தொழில் துறையினர் ஆகியோர் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story