விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி பாரதீய ஜனதா தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி பாரதீய ஜனதா தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 17 May 2018 4:30 AM IST (Updated: 17 May 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி பாரதீய ஜனதா கட்சி தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருக்காட்டுப்பள்ளி,

பாரதீய ஜனதா கட்சியினர், காவிரி டெல்டா மாவட்டங்களில் ‘உழவனின் உரிமை மீட்பு பேரணி’ என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். இந்த பேரணி தொடக்க விழா தஞ்சை மாவட்டம் கல்லணையில் நேற்று காலை நடந்தது. தொடக்க விழாவுக்கு பா.ஜனதா பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி பாரதீய ஜனதா கட்சி. காவி துண்டும், பச்சை துண்டும் ஒன்றுதான் என்பதை தமிழகத்திற்கு உணர்த்தும் வகையில் இந்த பேரணியில் காவித்துண்டுடனும், பச்சை துண்டுடனும் ஒன்றிணைந்து உள்ளர்கள். அவசரத்திற்கும், அவசியத்திற்கும் உதவும் கட்சி பாரதீய ஜனதா கட்சி தான். காவிரி பிரச்சினையில் பொய்முகங்களுக்கு, பிரசாரங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த பேரணி அமையும். காவிரி பிரச்சினையை 50 ஆண்டு காலமாக கிடப்பில் போட்டு விட்டு இப்போது குரல் கொடுப்பது ஏன்? இது காவிரி ஆதரவு குரல் அல்ல. பிரதமர் மோடி எதிர்ப்பு குரல்.

சென்னையில் பிரதமர் மோடி வந்தபோது வெற்று பலூன் விட்டார்கள். நாங்கள் ஆகாய விமானம் விட்டோம். காவிரி பிரச்சினையில் நிதானமாக, சிறப்பாக, முழுமையாக, மறுபடியும் விசாரணைக்கு வராத அளவில் ஒரு செயல் திட்டம் கொண்டு வர மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.

விவசாயிகள் நலனில் அக்கறை உள்ள கட்சி என்பதால்தான் தமிழகத்திற்கு விவசாயிகள் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.2600 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களுக்கு கூட இவ்வளவு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த சைக்கிள் பேரணி நிறைவு பெறும் நாளில் ஒரு புதிய விடியல் உருவாகும். அது தமிழகத்திற்கு நல்ல நேரமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் சைக்கிள் பேரணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

காவிரியில் நமக்குள்ள உரிமைகளை விட்டுக்கொடுத்து இன்றைக்கு வெறும் 177 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாக யார் காரணம்?. காவிரி பிரச்சினையில் யார் துரோகம் செய்தது?. இன்று தொடங்கி நடைபெறும் பேரணி கட்சி பேரணி அல்ல. விவசாய குடும்பங்களை பாதுகாக்க, விவசாயிகளுக்கு காவிரி பிரச்சினையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? என்பதை விளக்க நடக்கும் பேரணி.

கர்நாடகத்தில் நல்ல ஆட்சி அமைந்து அது தமிழகத்திற்கு நன்மையாக இருக்கும் என்று எண்ணினோம். சிறு சிக்கல் நிலவுகிறது. எத்தனை சிக்கல் வந்தாலும் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிதான். அதில் சந்தேகம் இல்லை. கர்நாடகத்தில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்குள் உறவை வலுப்படுத்த கர்நாடக முதல்-அமைச்சரை சந்தித்து தமிழக உரிமைகள் குறித்து பேசுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பா.ஜனதா தொண்டர்களுடன் சேர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டினார்.

இந்த சைக்கிள் பேரணி அடுத்த மாதம்(ஜூன்) 2-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story