ஓசூரில் துணிகரம் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை


ஓசூரில் துணிகரம் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 16 May 2018 10:15 PM GMT (Updated: 16 May 2018 9:13 PM GMT)

ஓசூரில் தனியார் ஓட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றார்கள்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை அடுத்த சர்ஜாபுரம் அருகே உள்ள சேவகப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனியார் பேட்டரி நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தனது சொகுசு காரில் நேற்று ஓசூர் வந்தார். காரை டிரைவர் பிரமோத் ஓட்டி வந்தார்.

ஓசூர் வந்த ரமேஷ் தன்னிடம் வேலை பார்க்கும் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ஓசூர் பழைய வசந்த் நகர் அருகில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் எடுத்தார். பின்னர் காரில் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சென்று உள்ளே சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது காரின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

தொடரும் சம்பவங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 10-ந் தேதி பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் காரை வழிமறித்து அவர் மீது மிளகாய் பொடி தூவிய கும்பல் அவரிடம் இருந்த ரூ.4 லட்சம், செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதன் தொடர்ச்சியாக ஓசூர் எம்.ஜி.சாலையில் ஒரு தனியார் ஷோரூமில் துளையிட்டு செல்போன்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காரின் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story