கோபிநாத பெருமாள் கோவில் அருகே கிணற்றில் குவியல் குவியலாக பாம்புகள் இருந்ததால் பரபரப்பு


கோபிநாத பெருமாள் கோவில் அருகே கிணற்றில் குவியல் குவியலாக பாம்புகள் இருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2018 4:15 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள கோபிநாதபெருமாள் கோவில் அருகே கிணற்றில் குவியல், குவியலாக இருந்து பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் கோபிநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் நாகசுந்தரம் என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மூங்கில் மரங்களுக்கு இடையே சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 20 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று பராமரிபற்ற நிலையில் உள்ளது. இந்தநிலையில் அங்கு வேலைசெய்யும் விவசாய தொழிலாளர்கள் மூங்கில் மரங்களை வெட்ட சென்றனர். அப்போது மூங்கில் இடுக்குகளிலிருந்து பாம்புகள் வருவதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்டில் விட்டனர்

இதைத்தொடர்ந்து அங்கு வந்த மக்கள் அருகில் உள்ள கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பழங்கால கிணற்றுக்குள் சிறிதும் பெரிதுமாக குவியல், குவியலாக பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும், வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும் கிணற்றுக்குள் குவியல் குவியலாக இருந்த பாம்புகளை நீண்ட கம்பிகள் மூலம் லாவகமாக பிடித்து அருகே உள்ள காட்டுப்பகுதியில் விட்டனர். இதில் சில பாம்புகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என கூறப்படுகிறது. 

Next Story