வரும் மழைக்காலத்தில் ‘மும்பையை வெள்ளம் சூழ்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு’


வரும் மழைக்காலத்தில் ‘மும்பையை வெள்ளம் சூழ்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு’
x
தினத்தந்தி 17 May 2018 2:58 AM IST (Updated: 17 May 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

‘வரும் மழைக்காலத்தில் மும்பையை வெள்ளம் சூழ்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு’ என்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் கூறினார்.

மும்பை,

மும்பையில் அடுத்த மாதம் மழைக்காலம் தொடங்குகிறது. நகரில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் இருப்பதற்காக பெரிய மற்றும் சிறிய சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நகரில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரும் 17 இடங்களில் வெள்ளம் சூழ வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி கண்டறிந்து உள்ளது.

இது தொடர்பாக நேற்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், நிலைக்குழு சேர்மன் யஸ்வந்த் ஜாதவ் ஆகியோர் தகிசர்- டி.என்.நகர், கொலபா-பாந்திரா-சீப்ஸ், தகிசர் கிழக்கு- அந்தேரி கிழக்கு ஆகிய மெட்ரோ வழித்தட பணிகள் நடக்கும் இடங்களில் சென்று பார்வையிட்டனர். மேலும் சாக்கடை தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டனர்.

பின்னர் இது குறித்து மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் கூறுகையில், சாக்கடைகள் தூர்வாரும் பணி 50 சதவீதம் தான் முடிந்து உள்ளது. உரிய நேரத்தில் இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்மந்தப் பட்ட காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள பல முக்கிய சாலைகளை தோண்டி மெட்ரோ வழித்தட பணிகள் நடந்து வருகின்றன. எனவே இந்த இடங்களில் வெள்ளம் சூழும் நிலை உள்ளது.

மெட்ரோ பணிகளால் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு மாநகராட்சி பொறுப்பாகாது. மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், என்றார். 

Next Story