ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்


ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 17 May 2018 5:49 AM IST (Updated: 17 May 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதால் வருகிற 31-ந் தேதிக்குள் பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை புறம்போக்கு, சாலை புறம்போக்கு, அரசு நிலங்களில் ஆக்கிரமித்து குடிசையில் வாழ்ந்து வருபவர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்த திட்டத்தின்படி குடியிருப்பு ஒதுக்கீடு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயனாளிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்தியாவில் வேறு எங்கும் பயனாளியின் பெயரிலோ அல்லது குடும்பத்தினரின் பெயரிலோ வீடோ அல்லது வீட்டு மனையோ இருக்கக்கூடாது. பயனாளி மற்றும் குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டின் மொத்த மதிப்பீட்டில் 10 சதவீத தொகையை பயனாளி பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புதாரர்கள் தவிர நகர பகுதியில் குடியிருக்கும், வாடகை வீட்டில் குடியிருக்கும் வீடு இல்லாத ஏழை மக்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள பயனாளிகள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களையும், பேரூராட்சி செயல் அதிகாரிகளையும் சந்தித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.

இந்த திட்ட பகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள பயனாளிகள் ஒப்புதல் பெறப்பட்டவுடன் அந்தந்த திட்ட பகுதிகளுக்கான பயனாளி பங்களிப்பு தொகையை தகுதிகளுக்கு ஏற்ப மாத தவணையாகவோ, 3 அல்லது 4 தவணையாகவோ கட்டுமான பணி முடிவடைவதற்கு முன்பு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் வங்கி வரைவு காசோலையாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

Next Story