பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும்


பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 9:47 PM GMT)

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் வருகை தரும் புதிய மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும் என்று முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பேசினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட அதிகாரிகள் உஷா சாந்தாஜாய் (நாகர்கோவில்), மரிய தங்கராஜ் (தக்கலை), ரேணுகா (குழித்துறை), முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிருந்தா, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பேசும்போது கூறியதாவது:-

பள்ளிகள் ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த கல்வி ஆண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும் சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. எனவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே புதிய நிற சீருடைகளை மாணவ-மாணவிகள் அணிந்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இலவச பாடப்புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அனுப்பி வைக்கப்படும். அதனால் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பள்ளிகள் திறந்ததும் முதல்நாள் பள்ளிகளுக்கு வரும் புதிய மாணவ- மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல் நாளிலேயே பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் முதல் நாளிலேயே கால அட்டவணையை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். ஜூன் மாதத்தில் இருந்தே மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 6, 7, 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் வாசிப்புத் திறன் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் சிறப்புக்கவனம் செலுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்கே பள்ளிகளுக்கு வந்துவிட வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்களும் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவார்கள். எனவே இதில் தலைமை ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பேசினார். 

Next Story