மாவட்ட செய்திகள்

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: 2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Resistance to set up sand quarry: Public standby wait for 2nd day

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: 2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: 2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
அறந்தாங்கி அருகே அழியாநிலை பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,

அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாறு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் அரசு மணல் குவாரிகள் அமைக்கப்பட்டும், தனியார் மாட்டு வண்டிகள், டிப்பர் லாரிகள் மூலமும் மணல் அள்ளப்பட்டதால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அழியாநிலை, இடையாத்திமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அழியாநிலை பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர்.

இந்நிலையில் அழியாநிலையில் மணல் குவாரி அமைக்கப்பட்டால் அப்பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அப்பகுதி பகுதி பொதுமக்கள் கடந்த வாரம், மணல் குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அழியாநிலையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று கூறியும், மணல் குவாரி அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

2-வது நாளாக...

அதன்படி வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் அழியாநிலை பொதுமக்கள், வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று முன்தினம் அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள ஆலமரத்தடியில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஆலங்குடி எம்.எல்.ஏ.வுமான மெய்யநாதன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து மெய்யநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், அழியாநிலை பகுதியில் தொடர்ந்து மணல் குவாரி அமைத்து மணல் எடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட போவதாக சில நாட்களுக்கு முன்பு என்னிடம் தெரிவித்தனர். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே நானும் இந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அழியாநிலை பகுதி மக்களுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். அழியாநிலை பகுதியில் மணல் குவாரி அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடும் வரை நானும் போராட்டத்தில் பங்கேற்பேன், என்றார்.