கவர்னரை சந்தித்தபின் பணிகள் நடக்கிறது அமைச்சர் கந்தசாமி சொல்கிறார்
கவர்னர் கிரண்பெடியை சந்தித்த பின் பணிகள் நடப்பதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி
புதுவை கடற்கரையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல்பரப்பு அமைக்கும் பணி மத்திய அரசின் உதவியுடன் ரூ.22 கோடி செலவில் நடக்கிறது. இந்த பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.
அக்டோபர் மாதத்திற்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறைமுகத்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். அவரிடம் பணி நிலவரம் தொடர்பாக அமைச்சர் கந்தசாமி கேட்டறிந்தார். வருகிற ஜூலை மாதத்துக்குள் பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டேன். துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பணிகள் தாமதமடைந்தன.
மீனவ சமுதாய மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். காலாப்பட்டு தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக புதுவை அரசுக்கு எந்த கோப்பும் வரவில்லை. மக்கள் நலனிற்கு ஏற்பதான் முடிவுகள் எடுக்கப்படும். மக்கள் நலனுக்காகத்தான் எங்கள் அமைச்சரவை உள்ளது.
புதுவை மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 6 மாதத்தில் தடை விதிக்கப்படும் என்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இன்னும் 2 மாதத்திற்குள் அந்த தடை விதிக்கப்படும். அதற்குள் மாற்றுப்பொருள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் இருக்கக்கூடாது. சுமூக உறவு இருந்தால்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனடிப்படையில்தான் கவர்னரை சந்தித்து மக்கள் நலத்திட்டங்களுக்கு கையொப்பம் பெற்று வருகிறேன். இதில் எனக்கும், முதல்-அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. எனக்கும், முதல்-அமைச்சருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படாது. கவர்னர், முதல்-அமைச்சர் என அனைவரும் பொதுமக்கள் நலனிற்காக பாடுபட வேண்டும்.
கவர்னரை சந்தித்தபின் பணிகள் நடக்க ஆரம்பித்துள்ளது. கவர்னரின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால்தான் நான் அவரை அடிக்கடி சந்தித்து வருகிறேன். கவர்னருடன் சண்டை போடாமல் நெருக்கமாக உள்ளேன்.
கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டபோது அமைச்சர் கந்தசாமிதான் அதிக அளவில் கவர்னர் கிரண்பெடியை விமர்சித்து வந்தார். அதன்பின் அவர்தான் முதன் முதலாக கவர்னரை சந்தித்தும் பேசினார். இப்போது அடிக்கடி அவரது துறை தொடர்பாக கவர்னரை சந்தித்து பேசியும் வருகிறார்.
சமீபத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கடுமையாக கவர்னர் கிரண்பெடியை விமர்சனம் செய்தார். இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி கவர்னரின் செயல்பாடு குறித்து பெருமையாக குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story