மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது


மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 18 May 2018 4:45 AM IST (Updated: 18 May 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி

கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க. ஆட்சி அமைக்க துணை போன மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னர்களை ஏஜெண்டாக நியமித்து தொல்லை கொடுத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் கூட்டணி 116 இடங்களை பெற்றுள்ளன. அந்த கூட்டணி கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்காமல் பெரும்பான்மை எனக்கூறி பா.ஜ.க.வை ஆட்சியில் கவர்னர் அமர்த்தியுள்ளார். பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. குறைந்த இடங்களை பெற்றும் பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மாற்று கட்சிகள் உதவியுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகின்றனர். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி கொள்கின்றனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் அதற்கு எதிராக ஆட்சி அமைக்கும் பணியை பா.ஜ.க. செய்கிறது.


பா.ஜ.க.வின் இந்த செயலை கண்டித்து இந்தியா முழுவதும் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் மத்திய அரசுக்கு ஏஜெண்டாக செயல்படும் கவர்னர்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு சரித்திரத்தை படைக்கும். இதற்கு தேவையான பணிகளை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் செய்வார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதே என்று கேட்ட போது, “இது தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசிப்போம். இரண்டும் ஒன்றா, வெவ்வேறா என்பதை ஆராய்வோம். அதை ஆராய்ந்து அடுத்த கட்ட முடிவை புதுச்சேரி அரசு எடுக்கும்” என்றார்.

Next Story