வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து பெண் பலி


வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 18 May 2018 5:23 AM IST (Updated: 18 May 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

முகப்பேரில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 9 மாத குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அம்பத்தூர்,

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசிப்பவர் உதயகுமார் (வயது 54). இவர், அத்திப்பட்டு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், தனது வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தரை தளத்தில் உள்ள வீட்டில் நடராஜன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர், தனது மனைவி லட்சுமி (45) உடன் சேர்ந்து வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்வது வழக்கம்.

சுமார் 25 ஆண்டுகள் ஆன அந்த வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது.

நடராஜன், லட்சுமி இருவரும் நேற்று வழக்கம்போல் வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மாலை 3 மணியளவில் திடீரென வீட்டின் மாடியில் உள்ள பால்கனி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த லட்சுமியின் தலையில் இடிபாடுகள் விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது. நடராஜனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த அவர்களின் 9 மாத பேத்தி லக்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பால்கனி இடிந்து விழுந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற முகப்பேர் 3-வது பிளாக் பகுதியை சேர்ந்த மகேஷ் (24) என்பவர் மீது இடிபாடுகள் விழுந்ததில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குழந்தை உள்பட 4 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். மேலும் நடராஜன், குழந்தை லக்சனா, மகேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள், இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் தொங்கியபடி இருந்த பால்கனி சுவர்களையும், இடிபாடுகளையும் அகற்றினர்.

சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story