வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை, கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை, கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 May 2018 11:57 PM GMT (Updated: 17 May 2018 11:57 PM GMT)

செங்குன்றம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமான சாலையை சீரமைத்தும், கால்வாயை தூர்வார வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலவாயல் கிராமத்தில் சன் சிட்டி மற்றும் குமரன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழையால் இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வீடுகளில் சிக்கி தவித்தவர்களை செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 நாட்கள் இரவு-பகலாக போராடி படகுகளில் சென்று மீட்டு, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மழை காலங்களில் பாடியநல்லூரில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தண்ணீர் பாடியநல்லூர் ஏரிக்கு செல்ல வழியில்லாமல் எங்கள் நகருக்குள் புகுந்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. எனவே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூர்வாரி எங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் தங்கு தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, மழை நின்ற பிறகு கால்வாயும், அதற்கு உரிய பாதையும் சரி செய்து தருவதாக உறுதி அளித்தார். அதன்பிறகு வீடுகளை சூழ்ந்து இருந்த தண்ணீரை வெளியேற்ற கால்வாய் மீது இருந்த தனியார் கம்பெனி ஆக்கிரமிப்புகளை அகற்றி பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகளை சரி செய்து மழைநீரை வெளியேற்றினர்.

ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளை கடந்த பிறகும் தற்போது வரை அந்த பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என சன் சிட்டி மற்றும் குமரன் நகர் வாழ் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மேலும் கூறியதாவது.

எங்கள் பகுதியில் மழை நின்ற பிறகு கால்வாய் தூர்வாரப்படும் என கலெக்டர் தெரிவித்தார். ஆனால் இதுவரையிலும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி, கால்வாய் தூர்வாரப்படவில்லை. தற்போது தனியார் கம்பெனிகள் மீண்டும் கால்வாய்களை ஆக்கிரமித்து உள்ளன.

வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலையும், இதுவரையிலும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட எங்கள் நகருக்குள் வரமுடியாத நிலை காணப்படுகிறது. நாங்களும் சாலையில் வாகனங்களிலும், நடந்தும் சென்று வரமுடியாமல் தவிக்கிறோம். குமரன்நகரில் நாங்களே கட்டிட கழிவுகளை கொட்டி பாதையை சீரமைத்தோம்.

தெரு விளக்குகளும் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கிறோம். இதை பயன்படுத்தி மர்மநபர்கள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எங்கள் பகுதியில் தனிக்கவனம் செலுத்தி, மழை காலங்களில் பாடியநல்லூரில் இருந்து வெளியேறும் மழைநீர் தங்கு தடையின்றி பாடியநல்லூர் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாயை தூர்வாரியும், அகலப்படுத்தியும் தரவேண்டும்.

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். நகரம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். குமரன் நகரில் இருந்து மழைநீர் வெளியேற கால்வாய்கள் அமைத்து தரவேண்டும். வரும் மழைகாலத்துக்குள் நாங்கள் பாதிக்கப்படாத வகையில் எங்கள் பகுதியில் சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story