தனியாக நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரின் தாயை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு


தனியாக நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரின் தாயை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 May 2018 4:30 AM IST (Updated: 19 May 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

கிண்டியில் தனியாக நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரின் தாயை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் பறித்துச்சென்று விட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முல்லை செல்வம். இவர், அந்த பகுதி அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருடைய தாயார் பூமயில்(வயது 62). இவர், நேற்று காலை மருத்துவமனைக்கு செல்ல நேரு நகரில் தனியாக நடந்து சென்றார்.

கிண்டி காமராஜபுரம் குமரன் தெருவில் அவர் சென்றபோது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள், திடீரென பூமயில் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூமயில், சுதாரித்துக்கொண்டு சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்து கொள்ளையர்களுடன் போராடினார். இதில் ஆத்திரம் அடைந்த மர்மஆசாமிகள், பூமயிலை தாக்கி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கிண்டி நேரு நகர் பகுதி எப்போதும் ஆள்நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். அந்த பகுதியில் பட்டப்பகலில் தனியாக நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story