திருவாரூர் அருகே நவீன முறையில் காய்கறி சாகுபடி: கலெக்டர் ஆய்வு


திருவாரூர் அருகே நவீன முறையில் காய்கறி சாகுபடி: கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 May 2018 5:00 AM IST (Updated: 19 May 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே நவீன முறையில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம், கடுகங்குடி ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பில் வேருக்கு நேரடி நீர் பாய்ச்சும் நவீன முறையில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்ந சாகுபடி பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பள்ளிவாரமங்கலத்தில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது விவசாயியிடம் நீர் பாய்ச்சும் முறை குறித்தும், இதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து கடுகங்குடி கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வேருக்கு நீர் பாய்ச்சும் முறையில் பூசணிக்காய் சாகுபடியை பார்வையிட்டார். அப்போது நவீன தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு சென்று அடைந்திடும் வகையில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

தமிழக கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்தியகோபால் மரப்பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்காக வேருக்கு நீர் பாய்ச்சும் நவீன முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 5 விவசாயிகள் வீதம் மொத்தம் 25 எக்டேர் பரப்பளவில் கொடி ரக காய்கறிகளான பூசணிக்காய், பரங்கிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவியுடன் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறையின் மூலம் சாகுபடி செய்யும் கொடி ரக காய்கறி செடியின் வேருக்கு நேரடியாக நீர் செல்வதால், குறுகிய காலத்தில் வேரின் வளர்ச்சி அதிகரித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சந்துரு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுரேஷ், வேளாண்மை துணை இயக்குனர் கல்யாணசுந்தரம், உதவி தோட்டக்கலை அலுவலர் சுந்தர்ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story