கட்சி நிர்வாகிகளுடன் இன்று களஆய்வு: புதுவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


கட்சி நிர்வாகிகளுடன் இன்று களஆய்வு: புதுவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 11:30 PM GMT)

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று புதுவை வந்தார். அவருக்கு கோரிமேடு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளுடன் இன்று களஆய்வு நடத்துகிறார்.

புதுச்சேரி,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த களஆய்வு புதுவை மாநிலத்தில் இன்று(சனிக்கிழமை) ஆனந்தா இன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு புதுவை வந்தார்.

அவருக்கு கோரிமேடு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து ஊர்வலமாக ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அங்கு ஓய்வு எடுத்தார்.

இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அக்கார்டு ஓட்டலில் இருந்த புறப்படும் மு.க.ஸ்டாலின் எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள ஆனந்தா இன் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் களஆய்வு மேற்கொள்கிறார். காலை 8 மணி முதல் 10 மணி வரை வடக்கு மாநில நிர்வாகிகளுடனும், காலை 10 மணி முதல் 11 மணி வரை தெற்கு மாநில நிர்வாகிகளுடனும் களஆய்வை நடத்துகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். தொடர்ந்து மதியம் காரைக்கால் நிர்வாகிகளுடன் கள ஆய்வை நடத்துகிறார்.

மாலை 4 மணிக்கு கள ஆய்வை முடித்து விட்டு அங்கிருந்து புறப்படும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாகப்பட்டினம் செல்கிறார்.

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக புதுவையில் கட்-அவுட், பேனர்கள் மற்றும் தி.மு.க. கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. 

Next Story