ஏற்காடு மலையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பெரியசாமி எச்சரிக்கை


ஏற்காடு மலையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பெரியசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 May 2018 5:32 AM IST (Updated: 19 May 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

மரங்கள் வெட்டி கடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அலுவலர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

ஏற்காடு மலையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி எடுப்பதை தடுக்க, மலை தளபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கலெக்டர் தலைமையில் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியினர் அவ்வப்போது கூட்டம் நடத்தி உரிய ஆவணங்களுடன் மரங்கள் வெட்டி எடுத்து செல்ல அனுமதி வழங்குகின்றனர். மேலும் ஏற்காட்டில் அதிக அளவு காபி மரங்கள் இருப்பதால் இவற்றை விறகுக்காக வெட்டி எடுத்துச்செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள மரங்களை ஒரு சிலர் உரிய அனுமதி இல்லாமல் வெட்டி கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து வன அலுவலர்கள் ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வெட்டி கொண்டு வரப்படும் மரங்கள் ஏற்றிய லோடு லாரிகளை சோதனை செய்து வருகின்றனர். அப்போது மரங்களை வெட்டி கடத்தி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்காடு அடிவார பகுதியில் நேற்று காலை வன அலுவலர் பெரியசாமி தலைமையில் வன அலுவலர்கள் அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மரங்கள் இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரான வேலூர் மாவட்டம் பட்டிபாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது23) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மரங்களை வெட்டி கடத்தி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தும் படி வன அலுவலர் பெரியசாமி, தெற்கு வனச்சரக அலுவலருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ஏற்காட்டில் அப்போது பணியில் இருந்த வன அலுவலர்கள் மினிலாரியை சோதனை செய்யாமல் விட்டது தெரிந்தது. இதுகுறித்து வன அலுவலர் பெரியசாமி கூறும்போது, ‘மரங்களை வெட்டி கடத்தி வந்த டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வன அலுவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை படி சம்பந்தப்பட்ட வன அலுவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். மேலும் ஏற்காடு மலையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனைகள் தொடரும்’ என்றார்.

Next Story