வாலிபர் சாவுக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்


வாலிபர் சாவுக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 May 2018 5:54 AM IST (Updated: 19 May 2018 5:54 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே, வாலிபர் சாவுக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பாலமுருகன் (வயது 27). இவர் வத்தலக்குண்டுவில் தனியார் கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். இவர், கடந்த 7-ந்தேதி வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் பிரதான சாலையில் ஸ்டேட் வங்கி காலனி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பாலமுருகனின் தாய் வளர்மணி கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. பாலமுருகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலமுறை போலீஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் நெல்லூர் பகுதி மக்கள் நேற்று அய்யம்பாளையம்-தாண்டிக்குடி சாலையில் நெல்லூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை 2 நாட்களில் கண்டுபிடித்து கைது செய்வோம். லாரியையும் பறிமுதல் செய்வோம் என உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பாலமுருகன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து பாலமுருகனின் உறவினர்கள் கூறுகையில், விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததாலேயே போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது போலீசார் கூறியபடி 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story