4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 5:01 AM GMT (Updated: 19 May 2018 5:01 AM GMT)

ஈரோட்டில், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 18–ந் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோட்டில், முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கி.தங்கவேலு தலைமை தாங்கினார். செயலாளர் டி.ராஜமுருகன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் யு.கே.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் வி.விநாயகமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி துறையில் பணி நிரவலை முழுமையாக கைவிட வேண்டும். 1997–ம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்ட ஆசிரியர் –மாணவர் விகிதம் 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் மூலம் அரசு நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும். ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச்செயலாளர் பி.மயில்சாமி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் தனக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story